Monday 30 July 2018

தமிழகத்தில் வளரும் அரசியல் மாண்பு!

          சமீப காலமாக தமிழக அரசியல் தலைவர்களிடம் காணப்படும் அரசியல் முதிர்ச்சி வரவேற்கப்படக்கூடியதாக இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக, அரசியல் மாண்பு என்னும் தளத்தில், தமிழக அரசியல் களம் மிக மோசமான நிலையில் இருந்தது. குறிப்பாக, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை தங்களை எதிரிகளாகவே கருதிக் கொண்டனர். இதற்கு மிக முக்கிய காரணம் முன்னாள் முதல்வர்களும், இரு கட்சிகளின் தலைவர்களுமாகிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதி. இந்த இரு தலைவர்களிடையே தோன்றிய காழ்ப்புணர்ச்சி, இவ்விரு கட்சிகளின் அடிவேர் வரையிலும் பரவியிருந்ததை தமிழக அரசியல் களம் குறித்து நன்கறிந்த நபர்கள் யாரும் மறுக்கமாட்டார்கள்.

முன்னாள் தலைவர்கள்

          இந்தியாவில் அரசியல் சார்ந்த இயக்கங்கள் தொடங்கியது முதல் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் நமது தலைவர்களிடம் காணப்பட்ட அரசியல் மாண்பு என்பது பிரமிக்கத்தக்கது. கொள்கை ரீதியிலாக தங்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவையெல்லாம் கருத்து மோதல்களாகத்தான் இருக்குமே தவிர, தரம் தாழ்ந்த தனி மனித விமர்சனங்களாகவோ அல்லது குழாயடிச் சண்டையாகவோ இருந்ததில்லை. மகாத்மா காந்தியுடன் கடுமையான சித்தாந்த மோதலில் ஈடுபட்டவர் அம்பேத்கர். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற அமைக்கப்பட்ட சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் என்னும் மாமேதையை காந்தி பரிந்துரைத்தார். தமிழகத்தில் கடுமையான சித்தாந்த மோதலுக்கு உள்ளானவர்கள் பெரியாரும் இராஜாஜியும். இருப்பினும் இருவரும் மிக உயரிய அரசியல் மாண்பினைக் கடைபிடித்தார்கள். நல்ல நண்பர்களாகவும் இருந்தார்கள். தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்து அ.தி.மு.க.வைத் தொடங்கி முதல்வரான எம்.ஜி.ஆர்.கூட கருணாநிதியைத் தரம் தாழ்ந்து விமர்சித்ததில்லை. இது போன்ற அரசியல் மாண்புக்கு உரித்தானவர்கள் நமது முன்னாள் தலைவர்கள்.


நன்றி: இந்தியா டுடே

எலியும் பூனையும்

          ஜெயலலிதாவின் தலைமையின்கீழ் அ.தி.மு.க. சென்றதும் இந்தக் காட்சிகள் மாறத்தொடங்கின. எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாகக் கருதத் தொடங்கினர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கருணாநிதியும், கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவும் சட்டசபைக்கு வருவதையே தவிர்த்தனர். இதனை அடியொற்றிய இரு கட்சிக்காரர்களும் தங்களை 'Tom & Jerry' கதாப்பாத்திரத்தில் வரும் எலியையும் பூனையையும் போல எண்ணிக் கொண்டனர். அந்தக் கதாப்பாத்திரங்கள்கூட சில சமயங்களில் சேர்ந்து பணியாற்றும். ஆனால் இவர்களோ எதிலும் ஒருசேரக் காட்சிதர மாட்டார்கள். பொதுவெளிகளில் சந்தித்துக் கொண்டாலும்கூட முகம் திருப்பிக் கொள்வது வழக்கமாயிருந்தது. ஒருவர் வீட்டு இல்லத் திருமணங்களுக்குக்கூட மாற்று கட்சியினரை அழைக்காமல் இருந்தனர். ஜெயலலிதா இறந்த பின்னரும்கூட பன்னீர்செல்வம் "தர்மயுத்தம்" நடத்தியபோது, சசிகலா "எதிர்க்கட்சித் தலைவரை பார்த்துக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார்" எனக்கூறியதிலிருந்தே இவர்களிடையே காணப்பட்ட வெறுப்பின் ஆழம் புரியும்.

இன்றைய நிலை

          தமிழகத்தின் அரசியலில் 30 ஆண்டுகாலம் கோலோச்சிய இரு தலைவர்களும் தற்போது களத்தில் இல்லை. இந்த நிலையில், இந்த இரு கட்சிக்காரர்களிடமும் காணப்பட்டு வந்த வன்மம் மறையத் தொடங்கியுள்ளதைப் போன்று தோன்றுகிறது. சட்டசபையில் முகத்தைத் திருப்பிக்கொள்ளாமல் ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக்கொண்டது இந்த மாற்றத்திற்கான தொடக்கமாக அமைந்தது. சமீபத்தில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் குறிப்புகளின்றி சட்டசபையில் பேசுவதை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா இறப்பின்போது ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்றதைப் போல, கருணாநிதியின் உடல்நிலை நலிவுற்றிருக்கும்போது முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளது இந்த அரசியல் நாகரிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.  இதுபோன்ற மாற்றங்கள் இன்னும் நிறையத் தேவை. இந்த மாற்றங்கள் இதோடு நின்றுவிடாமல் தமிழகத்தின் உரிமைகளைக் கோருவதில் நாடாளுமன்றம் வரை காணப்பட வேண்டும். இதுவே தமிழக மக்களின் விருப்பமும் கூட!

1 comment:

  1. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு... தொடர வேண்டும்...

    ReplyDelete