Thursday 26 July 2018

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா?

          இந்து மக்கள் வணங்கக்கூடிய தெய்வங்களுள் மிக முக்கியமான ஒரு தெய்வம் ஐயப்பன். ஐயப்பனுடைய கோயில்களுள் மிகவும் பிரபலமானது கேரளாவின் சபரிமலையில் அமைந்திருக்கக்கூடிய சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில். ஏறக்குறைய 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 கோடி மக்கள் வருகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை சரியா, தவறா என்ற தளத்தில் இக்கட்டுரை விரியும்.

          சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் 41 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொள்கிறார்கள். விரதம் மேற்கொள்ளும் காலகட்டத்தில் மாமிசத்தைத் தவிர்த்தல், போதைப் பொருட்களைத் தவிர்த்தல், பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளுதல் போன்ற வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்தக் கடுமையான விரத நடைமுறை பெண்களுக்கு ஒத்து வருவதில்லை எனவும், அவர்கள் மாதவிடாய் அடைவதால் தீட்டு பெற்றுவிடுவதாகவும் கூறி 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது சரியா, தவறா என்பதை முடிவு செய்யும்  முன், ஆன்மீகம், அறிவியல், அரசியலமைப்புச் சட்டம் ஆகிய மூன்று தளங்களில் இது குறித்த விவாதம் தேவை. 

ஆன்மீகம்

          இந்த உலகில் அனைத்தையும் படைத்தவர் கடவுள் எனக் கூறுகிறோம்.  இந்த உலகிலிருக்கும் உயிரற்ற பொருட்கள், உயிருள்ள பொருட்கள் என அனைத்திலும் அவரே நிரம்பியிருக்கிறார் எனவும் கூறுகிறோம். அவருடைய படைப்பினிலே அனைவரும் சமம் எனவும் கூறுகிறோம். இப்படியிருக்கும்போது, அவரால் படைக்கப்பட்ட (மதம் கூறுவதுபடி) ஆணுக்கு அவரை வழிபட உரிமையிருக்கும்போது, அவரால் படைக்கப்பட்ட பெண்ணுக்கு, அவராலேயே நிரப்பப்பட்ட பெண்ணுக்கு மட்டும் ஏன் அந்த உரிமையில்லை? பெண் மாதவிடாய் அடைவதால் தீட்டு அடைந்தவளாகிறாள் என்றால், அந்தத் தீட்டுப்பட்டவளிடமிருந்து பிறக்கும் ஆண் மட்டும் எவ்வாறு தீட்டு அற்றவனாய் இருக்கிறான்? அந்த தீட்டுப்பட்டவள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், வாழும் பூமி ஆகிய இவற்றில் தானே இந்த ஆணும் வாழ்கிறான்? இதையும் மீறி, அந்த கடவுளானவன் பாலினத்தின் அடிப்படையில் தன் குழந்தைகளிடையே ஏற்ற தாழ்வுகளை உருவாக்குபவன் எனில், அவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? அவன் பிரிவினைவாதியாகத்தானே இருக்க முடியும்? எனவே, மத நம்பிக்கையுள்ளவர்கள் நடுநிலையாகப் பேசினால், அந்தக் கடவுளுக்கு அனைவரும் சமம் என்பதை ஏற்றுக்கொண்டால், அவனை வழிபட அனைவருக்கும் சமமான உரிமையுண்டு என்பதை ஏற்றுக் கொள்வார்கள். எனவே, மத நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும் பெண்களுக்கு எந்தக் கடவுளையும் வழிபட உரிமையுண்டு.

 
ஆணுக்குப் பெண் இங்கு சரிநிகர் காண்

அறிவியல்

          மாதவிடாய் என்பதன் அறிவியல்தன்மை புரியாமல் இருக்கும்போதுதான் அது தீட்டு எனக் கூறும் மூடத்தன்மை நம்முள் நுழைகிறது. பருவமடைந்த ஒரு பெண், குழந்தை பெறுவதற்குத் தகுதியுடையவள் ஆகிறாள். அப்போது அவளுடைய கருப்பையில் (ovary) சினைமுட்டைகள் (ovum) உருவாகின்றன. அந்த சினைமுட்டை முதிர்ச்சியடைந்த 24 மணி நேரத்திற்குள் விந்து அதனுடன் சேர்ந்தால் அது கருவாக மாறுகிறது. சேரவில்லையெனில் அது இரத்தமாக பெண்ணுடம்பிலிருந்து வெளியேறுகிறது. இந்த சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. பூமி 365 நாட்களுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருவது எவ்வளவு இயல்பான நிகழ்வோ, அதுபோலத்தான் பெண்ணுடம்பில் 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நிகழ்வதும்! இதிலே தீட்டு என்பது எங்கிருந்து வருகிறது? இந்த உண்மை புரியாமல் பெண்களும் இதனை ஒப்புக்கொண்டு தங்களைத் தாங்களே தீட்டுப்பட்டவள் எனச் சொல்லி வருவது வேதனையளிக்கிறது. 

அரசியலமைப்புச் சட்டம்

          ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு புனித நூல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டமே புனித நூல். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது சரத்து 'மத வழிபாட்டுச் சுதந்திரத்தை' வழங்குகிறது. இந்த மத வழிபாட்டுச் சுதந்திரம் மத நம்பிக்கைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், இந்த சுதந்திரமானது பொது நலம், பிற அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் எனவும் குறிப்பிடுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ஆவது சரத்தின் இரண்டாவது பிரிவு  'பொது மக்களின் நுழைவுக்கு அனுமதியுள்ள எந்த இடத்திலும் மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்குத் தடை' எனக் கூறுகிறது. எனவே, கோயிலுக்குள் ஆண் நுழைய அனுமதியுண்டு எனில், அவனுக்குச் சரிசமமான பெண்ணுக்கும் நுழைய அனுமதியுண்டு. மதச் சுதந்திர உரிமை என்பது மிக முக்கிய அடிப்படை உரிமையான சமத்துவ உரிமைக்குக் கட்டுப்பட்டது.

          எனவே, ஆன்மீகம், அறிவியல், அரசியலமைப்புச் சட்டம் என எந்தத் தளத்தில் பார்த்தாலும் ஆணுக்கு என்ன உரிமையுள்ளதோ, அதே உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன. மதங்கள் இருப்பது யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த மதங்களால் ஏற்படும் பிற்போக்குத்தனங்கள் மற்றும் சமூகத் தீமைகள் தான் பிரச்சினை. சதி, பலதார மணம், குழந்தைத் திருமணம் போன்ற சமூகத் தீமைகள் எவ்வாறு தூக்கியெறியப்பட்டனவோ அதுபோல் பெண்ணுக்கான உரிமை மறுப்பும் தூக்கியெறியப்பட வேண்டும். இந்தக் கருத்து அனைத்து மதங்களுக்கும் பொருந்தும். கடவுள் என்றொருவர் இருப்பார் எனில், அவர் விரும்புவதும் அதுவாகத்தான் இருக்கும். பர்கா அணிதல், முத்தலாக் போன்று இன்னும் அகற்றப்பட வேண்டிய சமூகத் தீமைகள் நிறைய இருக்கின்றன. எனவே, இத்தீமைகளை அகற்ற நான் சொல்வது "பெண்களே! உங்கள் உரிமைகளை உணருங்கள். நரியிடமிருந்து ஆடுகள் சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே உங்கள் உரிமைகளை நீங்கள் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. இந்த ஆணாதிக்கச் சமூகம் உங்கள் மீது திணிக்கும் அடக்குமுறைகளை செம்மறி ஆடுகளைப் போல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். நியாயமான கேள்விகளைக் கேளுங்கள். பகுத்தறியுங்கள்!"

"மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்துவோம்"

2 comments:

  1. அருமையான கட்டுரை. அரசியல், அறிவியல் மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் சரியென்று சொன்னதன் வாயிலாக பெண்ணுரிமைக்கானக் குரலை ஓங்கி ஒலித்திருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். இதற்கு ஆண்கள் மட்டுமல்ல, பல பெண்களே தடையாக நிற்பதுதான் வேதனையளிக்கிறது. சமூகக் குரலுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் வருகைக்கும், தன்னம்பிக்கையளிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete