Monday 30 July 2018

தமிழகத்தில் வளரும் அரசியல் மாண்பு!

          சமீப காலமாக தமிழக அரசியல் தலைவர்களிடம் காணப்படும் அரசியல் முதிர்ச்சி வரவேற்கப்படக்கூடியதாக இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக, அரசியல் மாண்பு என்னும் தளத்தில், தமிழக அரசியல் களம் மிக மோசமான நிலையில் இருந்தது. குறிப்பாக, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை தங்களை எதிரிகளாகவே கருதிக் கொண்டனர். இதற்கு மிக முக்கிய காரணம் முன்னாள் முதல்வர்களும், இரு கட்சிகளின் தலைவர்களுமாகிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதி. இந்த இரு தலைவர்களிடையே தோன்றிய காழ்ப்புணர்ச்சி, இவ்விரு கட்சிகளின் அடிவேர் வரையிலும் பரவியிருந்ததை தமிழக அரசியல் களம் குறித்து நன்கறிந்த நபர்கள் யாரும் மறுக்கமாட்டார்கள்.

முன்னாள் தலைவர்கள்

          இந்தியாவில் அரசியல் சார்ந்த இயக்கங்கள் தொடங்கியது முதல் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் நமது தலைவர்களிடம் காணப்பட்ட அரசியல் மாண்பு என்பது பிரமிக்கத்தக்கது. கொள்கை ரீதியிலாக தங்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவையெல்லாம் கருத்து மோதல்களாகத்தான் இருக்குமே தவிர, தரம் தாழ்ந்த தனி மனித விமர்சனங்களாகவோ அல்லது குழாயடிச் சண்டையாகவோ இருந்ததில்லை. மகாத்மா காந்தியுடன் கடுமையான சித்தாந்த மோதலில் ஈடுபட்டவர் அம்பேத்கர். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற அமைக்கப்பட்ட சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் என்னும் மாமேதையை காந்தி பரிந்துரைத்தார். தமிழகத்தில் கடுமையான சித்தாந்த மோதலுக்கு உள்ளானவர்கள் பெரியாரும் இராஜாஜியும். இருப்பினும் இருவரும் மிக உயரிய அரசியல் மாண்பினைக் கடைபிடித்தார்கள். நல்ல நண்பர்களாகவும் இருந்தார்கள். தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்து அ.தி.மு.க.வைத் தொடங்கி முதல்வரான எம்.ஜி.ஆர்.கூட கருணாநிதியைத் தரம் தாழ்ந்து விமர்சித்ததில்லை. இது போன்ற அரசியல் மாண்புக்கு உரித்தானவர்கள் நமது முன்னாள் தலைவர்கள்.


நன்றி: இந்தியா டுடே

எலியும் பூனையும்

          ஜெயலலிதாவின் தலைமையின்கீழ் அ.தி.மு.க. சென்றதும் இந்தக் காட்சிகள் மாறத்தொடங்கின. எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாகக் கருதத் தொடங்கினர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கருணாநிதியும், கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவும் சட்டசபைக்கு வருவதையே தவிர்த்தனர். இதனை அடியொற்றிய இரு கட்சிக்காரர்களும் தங்களை 'Tom & Jerry' கதாப்பாத்திரத்தில் வரும் எலியையும் பூனையையும் போல எண்ணிக் கொண்டனர். அந்தக் கதாப்பாத்திரங்கள்கூட சில சமயங்களில் சேர்ந்து பணியாற்றும். ஆனால் இவர்களோ எதிலும் ஒருசேரக் காட்சிதர மாட்டார்கள். பொதுவெளிகளில் சந்தித்துக் கொண்டாலும்கூட முகம் திருப்பிக் கொள்வது வழக்கமாயிருந்தது. ஒருவர் வீட்டு இல்லத் திருமணங்களுக்குக்கூட மாற்று கட்சியினரை அழைக்காமல் இருந்தனர். ஜெயலலிதா இறந்த பின்னரும்கூட பன்னீர்செல்வம் "தர்மயுத்தம்" நடத்தியபோது, சசிகலா "எதிர்க்கட்சித் தலைவரை பார்த்துக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார்" எனக்கூறியதிலிருந்தே இவர்களிடையே காணப்பட்ட வெறுப்பின் ஆழம் புரியும்.

இன்றைய நிலை

          தமிழகத்தின் அரசியலில் 30 ஆண்டுகாலம் கோலோச்சிய இரு தலைவர்களும் தற்போது களத்தில் இல்லை. இந்த நிலையில், இந்த இரு கட்சிக்காரர்களிடமும் காணப்பட்டு வந்த வன்மம் மறையத் தொடங்கியுள்ளதைப் போன்று தோன்றுகிறது. சட்டசபையில் முகத்தைத் திருப்பிக்கொள்ளாமல் ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக்கொண்டது இந்த மாற்றத்திற்கான தொடக்கமாக அமைந்தது. சமீபத்தில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் குறிப்புகளின்றி சட்டசபையில் பேசுவதை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா இறப்பின்போது ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்றதைப் போல, கருணாநிதியின் உடல்நிலை நலிவுற்றிருக்கும்போது முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளது இந்த அரசியல் நாகரிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.  இதுபோன்ற மாற்றங்கள் இன்னும் நிறையத் தேவை. இந்த மாற்றங்கள் இதோடு நின்றுவிடாமல் தமிழகத்தின் உரிமைகளைக் கோருவதில் நாடாளுமன்றம் வரை காணப்பட வேண்டும். இதுவே தமிழக மக்களின் விருப்பமும் கூட!

Thursday 26 July 2018

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா?

          இந்து மக்கள் வணங்கக்கூடிய தெய்வங்களுள் மிக முக்கியமான ஒரு தெய்வம் ஐயப்பன். ஐயப்பனுடைய கோயில்களுள் மிகவும் பிரபலமானது கேரளாவின் சபரிமலையில் அமைந்திருக்கக்கூடிய சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில். ஏறக்குறைய 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 கோடி மக்கள் வருகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை சரியா, தவறா என்ற தளத்தில் இக்கட்டுரை விரியும்.

          சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் 41 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொள்கிறார்கள். விரதம் மேற்கொள்ளும் காலகட்டத்தில் மாமிசத்தைத் தவிர்த்தல், போதைப் பொருட்களைத் தவிர்த்தல், பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளுதல் போன்ற வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்தக் கடுமையான விரத நடைமுறை பெண்களுக்கு ஒத்து வருவதில்லை எனவும், அவர்கள் மாதவிடாய் அடைவதால் தீட்டு பெற்றுவிடுவதாகவும் கூறி 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது சரியா, தவறா என்பதை முடிவு செய்யும்  முன், ஆன்மீகம், அறிவியல், அரசியலமைப்புச் சட்டம் ஆகிய மூன்று தளங்களில் இது குறித்த விவாதம் தேவை. 

ஆன்மீகம்

          இந்த உலகில் அனைத்தையும் படைத்தவர் கடவுள் எனக் கூறுகிறோம்.  இந்த உலகிலிருக்கும் உயிரற்ற பொருட்கள், உயிருள்ள பொருட்கள் என அனைத்திலும் அவரே நிரம்பியிருக்கிறார் எனவும் கூறுகிறோம். அவருடைய படைப்பினிலே அனைவரும் சமம் எனவும் கூறுகிறோம். இப்படியிருக்கும்போது, அவரால் படைக்கப்பட்ட (மதம் கூறுவதுபடி) ஆணுக்கு அவரை வழிபட உரிமையிருக்கும்போது, அவரால் படைக்கப்பட்ட பெண்ணுக்கு, அவராலேயே நிரப்பப்பட்ட பெண்ணுக்கு மட்டும் ஏன் அந்த உரிமையில்லை? பெண் மாதவிடாய் அடைவதால் தீட்டு அடைந்தவளாகிறாள் என்றால், அந்தத் தீட்டுப்பட்டவளிடமிருந்து பிறக்கும் ஆண் மட்டும் எவ்வாறு தீட்டு அற்றவனாய் இருக்கிறான்? அந்த தீட்டுப்பட்டவள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், வாழும் பூமி ஆகிய இவற்றில் தானே இந்த ஆணும் வாழ்கிறான்? இதையும் மீறி, அந்த கடவுளானவன் பாலினத்தின் அடிப்படையில் தன் குழந்தைகளிடையே ஏற்ற தாழ்வுகளை உருவாக்குபவன் எனில், அவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? அவன் பிரிவினைவாதியாகத்தானே இருக்க முடியும்? எனவே, மத நம்பிக்கையுள்ளவர்கள் நடுநிலையாகப் பேசினால், அந்தக் கடவுளுக்கு அனைவரும் சமம் என்பதை ஏற்றுக்கொண்டால், அவனை வழிபட அனைவருக்கும் சமமான உரிமையுண்டு என்பதை ஏற்றுக் கொள்வார்கள். எனவே, மத நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும் பெண்களுக்கு எந்தக் கடவுளையும் வழிபட உரிமையுண்டு.

 
ஆணுக்குப் பெண் இங்கு சரிநிகர் காண்

அறிவியல்

          மாதவிடாய் என்பதன் அறிவியல்தன்மை புரியாமல் இருக்கும்போதுதான் அது தீட்டு எனக் கூறும் மூடத்தன்மை நம்முள் நுழைகிறது. பருவமடைந்த ஒரு பெண், குழந்தை பெறுவதற்குத் தகுதியுடையவள் ஆகிறாள். அப்போது அவளுடைய கருப்பையில் (ovary) சினைமுட்டைகள் (ovum) உருவாகின்றன. அந்த சினைமுட்டை முதிர்ச்சியடைந்த 24 மணி நேரத்திற்குள் விந்து அதனுடன் சேர்ந்தால் அது கருவாக மாறுகிறது. சேரவில்லையெனில் அது இரத்தமாக பெண்ணுடம்பிலிருந்து வெளியேறுகிறது. இந்த சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. பூமி 365 நாட்களுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருவது எவ்வளவு இயல்பான நிகழ்வோ, அதுபோலத்தான் பெண்ணுடம்பில் 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நிகழ்வதும்! இதிலே தீட்டு என்பது எங்கிருந்து வருகிறது? இந்த உண்மை புரியாமல் பெண்களும் இதனை ஒப்புக்கொண்டு தங்களைத் தாங்களே தீட்டுப்பட்டவள் எனச் சொல்லி வருவது வேதனையளிக்கிறது. 

அரசியலமைப்புச் சட்டம்

          ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு புனித நூல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டமே புனித நூல். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது சரத்து 'மத வழிபாட்டுச் சுதந்திரத்தை' வழங்குகிறது. இந்த மத வழிபாட்டுச் சுதந்திரம் மத நம்பிக்கைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், இந்த சுதந்திரமானது பொது நலம், பிற அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் எனவும் குறிப்பிடுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ஆவது சரத்தின் இரண்டாவது பிரிவு  'பொது மக்களின் நுழைவுக்கு அனுமதியுள்ள எந்த இடத்திலும் மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்குத் தடை' எனக் கூறுகிறது. எனவே, கோயிலுக்குள் ஆண் நுழைய அனுமதியுண்டு எனில், அவனுக்குச் சரிசமமான பெண்ணுக்கும் நுழைய அனுமதியுண்டு. மதச் சுதந்திர உரிமை என்பது மிக முக்கிய அடிப்படை உரிமையான சமத்துவ உரிமைக்குக் கட்டுப்பட்டது.

          எனவே, ஆன்மீகம், அறிவியல், அரசியலமைப்புச் சட்டம் என எந்தத் தளத்தில் பார்த்தாலும் ஆணுக்கு என்ன உரிமையுள்ளதோ, அதே உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன. மதங்கள் இருப்பது யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த மதங்களால் ஏற்படும் பிற்போக்குத்தனங்கள் மற்றும் சமூகத் தீமைகள் தான் பிரச்சினை. சதி, பலதார மணம், குழந்தைத் திருமணம் போன்ற சமூகத் தீமைகள் எவ்வாறு தூக்கியெறியப்பட்டனவோ அதுபோல் பெண்ணுக்கான உரிமை மறுப்பும் தூக்கியெறியப்பட வேண்டும். இந்தக் கருத்து அனைத்து மதங்களுக்கும் பொருந்தும். கடவுள் என்றொருவர் இருப்பார் எனில், அவர் விரும்புவதும் அதுவாகத்தான் இருக்கும். பர்கா அணிதல், முத்தலாக் போன்று இன்னும் அகற்றப்பட வேண்டிய சமூகத் தீமைகள் நிறைய இருக்கின்றன. எனவே, இத்தீமைகளை அகற்ற நான் சொல்வது "பெண்களே! உங்கள் உரிமைகளை உணருங்கள். நரியிடமிருந்து ஆடுகள் சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே உங்கள் உரிமைகளை நீங்கள் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. இந்த ஆணாதிக்கச் சமூகம் உங்கள் மீது திணிக்கும் அடக்குமுறைகளை செம்மறி ஆடுகளைப் போல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். நியாயமான கேள்விகளைக் கேளுங்கள். பகுத்தறியுங்கள்!"

"மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்துவோம்"

Tuesday 24 July 2018

பாலியல் பலாத்காரம் - வேண்டும் மரண தண்டனை

          தினந்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய செய்திகளில்லாமல் செய்தித்தாள்கள் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மிக முக்கியமானது பாலியல் பலாத்காரம். காலம் முழுவதும் அவளின் நினைவுகளில் வடுவாகப் படர்ந்திருக்கும். சமீப காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க சட்டம் முதல் ஆண்களின் மனோநிலை வரை மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமானது.

மத்திய அரசின் சட்ட திருத்தம்

          பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தண்டனையைக் கடுமையாக்க, மத்திய அரசு 'இந்தியக் குற்றவியல் சட்ட திருத்த மசோதா 2018' -இனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதிலுள்ள முக்கியப் பிரிவுகள் பின்வருமாறு:
  • பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்குக் குறைந்தபட்சமாக வழங்கப்பட்டு வந்த 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையானது 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறை, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை.
  • 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்தால் குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனை, அதிகபட்சமாக மரண தண்டனை.
  • பாலியல் பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்படுவோருக்கு ஜாமீன் வழங்கப்படாது.
  • பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். மேல் முறையீட்டுக்குச் சென்றால் 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 

வேண்டும் மரண தண்டனை

          பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரக் குற்றங்களை வயதுவாரியாகப் பிரித்து தண்டனை வழங்குவது தவறு. பாலியல் வன்கொடுமை என்பது குழந்தைக்கு நடந்தாலும் சரி, பேரிளம் பெண்ணிற்கு நடந்தாலும் சரி, தண்டனையென்பது மரண தண்டனையாகத்தான் இருக்க வேண்டும். இரக்கமற்ற முறையில் பெண்களைச் சீரழிக்கும் மிருகங்களுக்கு இரக்கம் காட்டுவது தவறு. தவறு என்று தெரிந்தும் செய்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது தண்டனைதானே தவிர மன்னிப்பல்ல. பெண்களைச் சரியாக ஆடை அணியச் சொல்லும் முன், நம் கண்களும் எண்ணங்களும் சரியாக உள்ளனவா என்பதனை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண் அரைக்கால் சட்டையுடன் நடந்தால் சவுகரியம் எனவும், பெண் அரைக்கால் சட்டையுடன் நடந்தால் ஆபாசம் எனவும் தோன்றினால், மாற வேண்டியது பெண்களின் ஆடையல்ல. பார்ப்பவரின் கண்களும் எண்ணங்களுமே!